Friday 30 October 2015

நானே நான்

                நான் பால்கனியில் நின்றுக்கொண்டு, என் காஃபி கோப்பையில் மீதமிருந்த கடைசி சொட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். யாரோ பின்னாளிருந்து என், தோளை தட்டுவது போலிருந்தது.
         ‘அது எப்படி? நான் மட்டும் தான் வீட்டிலிருக்கிறேன். பின்பு யார் என் தோளை தட்டுவது?’
          திரும்பி பார்த்தேன். ஒரு முதியவர். அறுபது வயதிற்கு மேலிருக்கும். தலை கொஞ்சம் நறைத்திருந்தது. இடது கன்னத்தில் எனக்கு இருப்பது போல்  மச்சம். தலையில் எனக்கு இருப்பது போல் தழும்பு. நானே தான். நான் அறுபது வயதில், எப்படி இருப்பேனோ அப்படியே இருந்தார். என்னை அவர் பக்கமாக இழுத்தார். நான் அவரை தள்ளிவிட்டு ஓடினேன்.
         அப்போது, யாரோ வாக்கிங் ஸ்டிக்கால், என்னை தடுப்பது போலிருந்தது. ஒரு கிழவர் என்னை சிரித்தபடி, வாக்கிங் ஸ்டிக்கால் என்னை அடித்தார். உடல் மெலிந்து, தோள் சுருங்கி, கன்னங்களில் குழி விழுந்து. பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தார். நிற்க முடியாமல், சுவரி சாய்ந்த படி, தரையில் உட்கார்ந்தார்.
        “என்ன பாக்குற? நான் தான். நீ. அடையாளம் தெர்லயா? அவன தள்ளிவிட்டா நான் விட்ருவேனா?”
        அவரை பார்க்க பயந்து, நடு ஹாலுக்கு ஒடிவிட்டேன். அங்கு ஒரே அழு குரலாக இருந்தது. மாலைகள் போடப்பட்ட, ஒரு கண்ணாடிப் பெட்டியை சுற்றி பலர் அமர்ந்திருந்தனர். அருகில் சென்று, கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தேன். அந்த வாக்கிங் ஸ்கிட் கிழவர், தான் சவமாக கிடந்தார். எனக்கு தலை சுற்றியது. என் அறைக்கு சென்று கதவை பூட்டினேன். சுவற்றில் என் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது. மாலையை பிய்த்து எறிய, படத்திற்கு அருகில் சென்றேன். படத்திலிருந்து வெளியே வந்த ஒரு கை, என்னை படத்திற்குள் இழுத்துக்கொண்டது.

பழைய நாவல்

               ஒரு பழைய புத்தக கடையில் அந்த நாவலை வாங்கினேன். அட்டை இல்லாமல் மஞ்சள் புடித்து, குப்பை போல கடந்தது. கடைக்காரர் அந்த நாவலுக்கு காசு வாங்கவில்லை. முதல் வேலையாக என் அறைக்கு போன உடன், நாவலை புரட்டிப்பார்த்தேன். அதிலிருந்த உலகம் வேறுவிதமாக இருந்தது. மனிதர் உட்பட அணைத்து பட்சிகளிலும் ஒரு கவர்ச்சி இருந்தது. அந்த நாவலின் நாயகனுக்கு என் பெயர் தான். வெகு சீக்கிரத்தில், என்னுடன் ஒட்டிக்கொண்டான். தினமும் இரவு, நாவலை திறந்தவுடன், அவனுடைய உலகத்தை பற்றி சிலாகிக்கத் தொடங்கிவிடுவான். ஒரு நாள் அவனிடம் என் ஆசையை சொன்னேன்.
           “நண்பா… என்னையும் உங்கள் உலகத்திற்கு அழைத்து செல்கிறாயா?”
            “நிச்சயம். ஆனால் ஒரு பகல், ஒரு இரவு மட்டும் தான் நீ இங்கு இருக்கவேண்டும். மேலும், நீ இங்கு வரும் அதே நேரம் நான் உன் உலகத்திற்கு போய்விடுவேன். சரியா?”
             “அப்படியே நடக்கிறேன்.”
                 அன்று இரவே நான் இங்கு வந்துவிட்டேன். அவன் என் உலகத்திற்கு போய்விட்டான். அவன் அறையில் மேஜை மேல் உள்ள இந்த நாவலை பத்திரமாக கையில் எடுத்து வைத்துக்கொண்டும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அந்த நாவலை புரட்டி, அவனுடன் நான் பேசவேண்டும் என்று கட்டளையிட்டான். நான் மண்டையை ஆட்டினேன்.
இப்போது முதல் வேலையாக ‘சுவாரத் தீவிற்கு’ செல்ல வேண்டும். அந்த தீவின் பெண்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். அதற்கு முன் இந்த நாவலை எரிக்க வேண்டும்.   

Friday 2 October 2015

அவன்………..


“எதார்த்த வாழ்கையின்மீது அவன் எண்ணோட்டத்தை ஊடினைத்ததில்லை. எவருடைய இறப்பும் அவன் மனதை பாதித்ததில்லை. எதிர்காலத்தைப் பற்றியோ, இறந்தகாலத்தைப் பற்றியோ சிந்தித்ததில்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொள்வான். அவன் மற்றவர்கள் மீது ஆழ்ந்த அன்போ, கடுமையான வெறுப்போ கிடையாது. எவர்மீது நம்பிக்கை இல்லை. அவன் வாழ்கையை எந்த ஒரு இடத்திலும் சுயபரிசோதனை செய்ததில்லை. செய்யத் தோன்றியதுமில்லை. ஏன்னிந்த தனிமையென்று அவன் யோசித்ததில்லை. தினமொரு காதலும், தினமொரு காதலியும், தினம் மாறும் மேகங்கள் போல. இந்தப் பத்தியை எழுதும் வரை, “ நான் ஏன் இப்படி?”யென்று அவனை அவன் கேட்டதில்லை. இப்போது தான்……..”

கழிப்பறை புத்தன்

                        கழிப்பறை. இதற்கும் எனக்கும் பிணக்கம் அதிகம். நல்ல நண்பன். நல்ல ஆசிரியன். நல்ல மனிதன். ஏன் அதற்கும் மேல்.
முன்பு போல இப்போது இல்லை. முன்பெல்லாம். தனிமை அவ்வளவு பிடிக்கம். அதுவாகவே என்னை தன்னுள் இழுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது என்னை இழுத்தாலும், நான் விலகிக்கொள்கிறேன். அது என்னை அடிமை படுத்துகிறது. அதை பற்றி பேசுவதற்கு தான் நான் இங்கு வந்தேன்.
              கழிப்பறை, “ கெளதம சித்தார்த்தா, உனக்கு என்ன தான் பிரச்சணை? இத்தணை நாள் தனிமையை அனுபவித்துவிட்டு, இப்போது ஏன் பிடிக்கவில்லை என்கிறாய்? அடிமை படுத்துவதாக சொல்கிறாய்? அதில் திளைத்து தானே நீ ஞானம் பெற்றாய்?.....”
                 “ஆம் ஞானம். பெரிய ஞானம்…”
                 ”வெளிப்படையாக சொல்”
          என்னால் அடக்க முடியவில்லை. கொட்டிவிட்டேன்.
               “ உலகில் மிகவும் சுதந்திரமானவன் நான். எதுவும் யாரும் என்னை அடிமை படுத்த முடியாது. இந்த தனிமை உட்பட. ஆனால் எனக்கு ஒரு ஆசை. அவ்வளவே…”
              “ஆஹா அது தான் கதையா? நீ தான் ஆசைகள் துறந்தவனாயிற்றே? பதினைந்து வயதில், உன் ராஜ வாழ்க்கை, செல்வம், கெளரவம் எல்லாத்தையும் தூக்கியெறிந்ததாக சொல்வார்கள்? பின் என்ன ஆசை?”
               “தனிமையை நிரப்ப வேண்டும்”
               “உன் சிஷியர்களோடு இரு, உன்னை பார்க்க வரும் மக்களோடு நேரம் செலவிடு”
              “நண்பரே தனிமை வேறு, தனியாக இருப்பதென்பது வேறு”
                 “ பின், எதனால் நிரப்பமுடியும்?”
               “ஒரு பெண்னால்”
              “ஆகட்டும்”
               “எப்படி”
             “கெளதமா அது பெண்ணுக்கு மட்டும் தான் தெரியும்”
             “எனக்கான பெண் வேண்டும்”  
            “பொரு. சுவாரையை அழைக்கிறேன்”
            ”கொஞ்சம் இரு. நான் வெளியே போகிறேன். அவளை அங்கு வரச்சொல். இங்கு வேண்டாம்”
       “அட கெளதமா… சுவாரையை இங்கு மட்டும் தான் பார்க்க முடியும்.”
                   ****************************************************
      சுவாரை என்னை போல கரு நிறம். மிகவும் அழகானவள். வலது கன்னத்தில் ஒரு மச்சம். புட்டத்தை தொடும் முடி. இத்தாதி… இத்தாதி……..
             *******************************************
                 அன்று முதல் தினமும் பல மணி நேரம் கழிப்பறையில் கழித்தேன். நான் நுழைந்தவுடன், சுவாரை வந்து விடுவாள். சில நேரம், பேசுவோம், சில நேரம் சண்டையிடுவோம், சில நேரம் விளையாடுவோம், சில நேரம் புணர்வோம். ஆனால் அதிக நேரம் என்னிடம் கேள்விக் கேட்பதிலேயே கழித்தாள்.
          “நீ உன் பதினைந்து வயதில் சவ ஊர்வலத்தை பார்க்காமல். ஒரு பெண்ணின் முழு உடலை பார்த்திருந்தால் இல்லை ஒரு பெண்ணை காதலித்திருந்தால் இப்போது என்னவாய் இருந்திருப்பாய்?” 
             “தெரியவில்லை”
               “……….?”
               “தெரியவில்லை”
              “…………?”
           “தெரியவில்லை. ஏன் உச்சக்கட்டம் அடைந்த பின்னும் என் நெற்றியில் முத்தம் கொடுக்க துடிக்கிறாய் சுவார? ஏன் எப்போது கூட என் தலையை கோதுகிறாய்?”
           ”…”
          “அட இது தான் வெட்கமா?”
          “என்னைவிட அழகாக, அறிவாக, ஒரு பெண் வந்தாள். என்னைவிட்டு விடுவாயா?”
          “நிச்சயம். நீ?”
          ”நான் அப்படியில்லை. என்னால் முடியாது.”
          ”ஏன் என்னை அவ்வளவு பிடிக்குமா?”
           “நிறைய. அளவில்லை”
           அவள் மடியில் படுத்துக்கொண்டு அழுதேன்.
           “சுவார…சுவார…”
                 ****************************************
         இப்போது போதனைகளை நிறுத்திவிட்டேன். எப்போதும் சுவாரை தான். அவளுக்காக நான் எனக்காக அவள். ஒன்றோடு ஒன்றாகிவிட்டோம். என்னேரமும் எனக்கு அவள் நினைவு தான். அவள் கண்ணசைவுக்காக காத்துக்கிடந்தேன்.
                *****************************************
      ”சுவார… சுவார…. என் ராஜாங்காத்தின் ராணியே, எங்கே இருக்கிறாய்? சுவார…. சுவார”
       “கெளதமா? யாரை தேடுகிறாய்? “
       ”நண்பா நீயா? எங்கே என் சுவார”
       “சுதந்திர புருஷா… ஞானப்பிதாவே…. எங்கே நீ”
        “நண்பா யாரை தேடுகிறாய்?”
   “உலகின் மிகவும் சுதந்திரமானமன், யாருக்கும் எதற்கும் அடிமையாக இல்லாதவன், உலகத்துக்கு ஞானத்தை போதிப்பவன்… என்று ஒருவர் இங்கு திரிந்தாரே. அவரை தான்?”
        “என்ன கெளதமா? அவரை நினைவிருக்கிறதா?”
                என்னால் பேசமுடியவில்லை. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
           “இந்த கழிப்பறை புத்தனின் போதனை ஏறுகிறதா? தனிமையை நிரப்பவந்தவள் உன்னையே மூழ்கடித்துவிட்டாளா?”
           “ஆம் நண்பா”
          “ அவளிடமே மொத்த ஞானமும் புதைந்துக்கிடக்கிறது. போதி மரத்தை விடுத்து. போய் அவளை தேடு”
         “அவள் எங்கு இருப்பாள்?”
         “நீ உன் உள்ளேயும் வெளியேயும் போட்டுக்கொண்ட வேஷங்களை களைத்தால் அவளே உன்னை அள்ளிக்கொண்டுப் போவாள்”
          “நிச்சயம் நண்பா. ஒருவேளை என் பதினைந்து வயதில் சவ ஊர்வலத்தை பார்க்காமல். ஒரு பெண்ணின் முழு உடலை பார்த்திருந்தால்  இல்லை ஒரு பெண்ணை காதலித்திருந்தால் இப்போது நான் என்னவாய் இருந்திருப்பேன் நண்பா?”

நாற்றம்

*                     
            எனக்கு வெள்ளை நிறம் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவள் அணிந்திருக்கும் வெள்ளை ப்ரா எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பல இடங்களில் மஞ்சள் கரைகள் படிந்திருக்கிறது. இந்த இருட்டரையில் அந்த வெள்ளை ப்ரா மட்டும் தனியாக தெரிகிறது. அது எனக்கு வெருப்பையூட்டுகிறது.
              “ப்ராவ கழட்டியெரி”
              “இருயா”
          ப்ராவை மட்டும் அல்ல, இவளையும் எனக்கு பிடிக்கவில்லை. வயது முப்பதிற்கு மேல் இருக்கும். கறுத்துப் பெருத்து, எவ்வித கவர்ச்சியுமற்று இருக்கிறாள். வீங்கித்தொங்கும் வயிற்றை பாக்கவே உமட்டுகிறது. கண்டிப்பாக இவளுக்கு இரண்டு குழந்தைகளாவது இருக்கும். தலையில் இருக்கும் மல்லிகை பூவையும், ஹேர்பின்னையும் எடுக்கவே இவ்வளவு நேரம் ஆக்குகிறாள். எனக்கு கட்டிலில் இருக்க அசெளகர்யமாக இருக்கிறது. இதில் இவள் வேர்வை நாற்றம் வேறு.
       ‘பன்னி, பன்னி….’
          இவளைவிட குறைந்த வயதில், இருவது வயதில் கூட. ஏன் பதினைந்து வயதுகளில் கூட பெண்கள் இருந்தனர். அதில் ஒருத்தி பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண்னைப் போல இருந்தாள். அவள் பத்தாவது தான் படிக்கிறாள். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. வெருப்படைந்து பஸ் ஸ்டாண்டில் நின்றுக்கொண்டிருக்கும் போது தான் இவள் வந்தாள். இவளாகத் தான் என்னிடம் வந்து கேட்டாள். இருப்பதை கொடுத்தாள் போது என்று சொன்னாள். காண்டமும் இருப்பதாகச் சொன்னாள்.  இவளுடைய கறுமை நிறம் என்னை மயக்கிவிட்டது. இப்போது என்னை கட்டிலில் இருந்து எழவிடாமல் செய்வதும் இந்த கறுமை நிறம் தான்.
       ‘கருப்பு பன்னி, கருப்பி’
         நான் இதற்கு முன் எந்த பெண்ணிடமோ, ஆணிடமோ புணர்ச்சியில் ஈடுபட்டதில்லை. அதை இவளிடம் சொல்ல வெட்கமாக இருந்தது. ஆனால் இதை இவள் என் முதல் நகரலிலேயே கண்டுபிடித்துவிடுவாள். அது நிச்சயம். அப்படித்தான் மருது சொன்னான்.
          அப்பாட ஒருவழியாக அந்த ப்ராவை கழற்றிவிட்டாள்.
**
         மருது, என் கல்லூரி நண்பன். விருதுநகர் பக்கம் ஏதோ கிராமத்தை சேர்ந்தவன். பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக இருப்பான். கறுப்பு அய்யனார் சிலையை போல இருப்பான் என்றும் சொல்லலாம். அவன் மீது எங்களுக்கு பொறாமையாக இருக்கும். மாதத்திற்கு எப்படியும் ஒருமுறையாவது, விபச்சாரிகளிடம் சென்றுவிடுவான். அப்படி ஒவ்வொரு முறை சென்றபின், அடுத்தநாள் அந்த அனுபவங்களை எங்களிடம் சொல்லுவான். அந்த பேச்சுகள் தான் என்னை இந்த கட்டில் வரை கொண்டுவந்திருக்கிறது. மருது சொன்னதையெல்லாம், என்னிடம் கேட்காதீர். அந்த அனுபவங்களை அவனைப் போல பெற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்னைப் போல முயலுங்கள்.
***
         மருது ஒரு மகான். ஆம். அவன் சொன்னபடியே இவள் கண்டுபிடித்துவிட்டாள். அதற்கு ஏன் இந்த நமட்டுச் சிரிப்பு. இது இவளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். நிச்சயமாக.
          கரண்ட் கட். இன்னும் அதிக வியர்வை. இன்னும் அதிக நாற்றம்.
         இவள் எதையும் (நான் காட்டும் உண்ர்ச்சிகளைப் போல) காட்டுவதாக தெரியவில்லை. மருது சொன்னபடியே தான் இவளும் நடந்துக் கொண்டாள். ஆம். மருது ஒரு மகான்.
         “இது உனக்கு எத்தணாவது முற?”,நான்.
        “இன்னைக்கா?”
       அடுத்து பேசவில்லை. உண்மையிலேயே நான் கற்பனை செய்ததைக் காட்டிலும் ரொம்ப போதையாக இருக்கிறது. இல்லை. இல்லை. இதை போதை என்று சொல்லமுடியாது. என்னை பொருத்தவரை, ஒன்றை நாம் அனுபவிக்க வேண்டும் அதுவே போதை. அந்த ஒன்று நம்மை அனுபவிக்க கூடாது.
       இல்லை இல்லை. இது போதை தான்.
****
      “எப்பயுமே உன்னோட பேச்ச கேக்குற மாதிரி அதிகாரமா நடந்துக்க. அவளுக சொல்றபடி நடந்துக்காத. அப்புறம் அவ்வளவு தான். உன்ன விடமாட்டாளுங்க. தே.. பு..”, மருது.
*****
       த்தா… மருது ஒரு மகான் தான்.
******
       “………………………..”
*******
      ஃபேண்டை அணியும் பொழுது, அவளிடம் அவள் சொந்தக்கதையை கேட்க வேண்டும் போல் இருந்தது.
********
      மருது பல விபச்சாரிகளின் கதைகளை சொல்லியிருக்கிறான். சிலர் அழுதுக்கொண்டே சொல்வார்களாம். சிலர் ’தம்பி’ என்று அழுதுக்கொண்டே சொல்வார்களாம். சிலர் ‘சும்மா தான்’ என்று முடித்துவிடுவார்களாம்.
*********
      ஆனால் இவளிடம் கேட்க போவதில்லை. கேட்டு கதை எழுத, நான் என்ன எழுத்தாளனா?
**********      
  இன்னும் கரண்ட் வரவில்லை. அவள் வியர்வை முழுக்க என்மீது இறக்கிவிட்டாள். என் சட்டையை வைத்து துடைத்துக்கொண்டிருந்தேன்.
என்னாலேயே என்னுடைய இந்த நாற்றத்தை பொருத்துக்கொள்ளமுடியவில்லை.                            

காளி

               காளிக்கு இது ஒன்பதாவது மாதம். கடந்த மூன்று மாதங்களாக தன் அம்மா வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று தன்னை பார்க்க வந்த கணவன், பழங்களோ, ஊட்டச்சத்து மருந்துகளோ வாங்கிவராமல், அறிவுரைகளை மட்டும் கொண்டுவந்தது, அவன் மீது வெறுப்பையும், தன் தாய்வீட்டு பணநிலைமையை நினைத்து கவலையையும் உண்டு பண்ணியது. இந்த கவலை, இரண்டு நாட்களாகவே அவளை வாட்டியது. அதற்காக முதல் குழந்தையை கவனிக்காமல் இருக்கமுடியுமா? காம்பவுண்ட் வாசலில் அமர்ந்துக்கொண்டு, கிண்ணத்திலிருந்த சுடுகஞ்சியை தன் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். காளியின் அப்பா தன் ட்ரை-சைக்கிளில் குழந்தையை அமரவைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வாய்க்கும் தன் பேத்தியை தூக்கிக்கொண்டு ட்ரை-சைக்கிளுக்கு ஓடுவது, அவருக்கு ஏனோ ஒரு பெரிய சந்தோஷம். இரண்டு நாட்களாக அவருக்கு எந்த சவாரியும் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் சவாரி கிடைக்கும். சில நேரங்களில் எழு நாட்களும். ஆனால் மினி டோர், சின்ன யானைகள் வந்தவுடன், இவர் தொழில் படுத்துவிட்டது. எந்த வண்டியும் கிடைக்காத நேரங்களில் அவசரத்திற்கு அழைக்கும் அப்பள கம்பேனிக்காரர்களும், மினி டோருக்கும், சின்ன யானைக்கும் வாடகை கொடுக்க வசதியில்லாதவர்களும் தான் இவர் வாடிக்கையாளர்கள்.
       காளி, “அப்பா, மணி என்ன முடிவெடுத்திருக்கான்?”
         “தெரியலயேமா. உன் தம்பிட்ட தான் கேக்கனும். இல்ல உங்கம்மா வருவா அவள்ட கேளு”
         “என்னப்பா அவன்ட எதுவும் கேக்க மாட்டிங்களா?”
         “அவன்ட என்னம்மா கேக்க? பாவம் அவனே நொந்து போயிருக்கான்…. அவன்ட எதுவும் கேட்டுக்காத. உங்கம்மா இப்ப பூவித்துட்டு வந்துருவா அவள்டயே கேளு”
       மணி, காளியுடைய தம்பி. காளிக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். சிவகங்கையில் கல்யாணமாகி போய்விட்டாள். ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. போன வாரம் வந்திருந்தாள். மணியுடைய கதை தான் பெரிய கதை.
        மணி பத்தாவது வரை அருகில் உள்ள மாநகராட்சியில் படித்தான்.  அதற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு தெரு நண்பர்களுடன் ஊர் சுற்றப்பழகிக்கொண்டான். பின்பு சிகிரட், குடிப்பழக்கம், கஞ்சா என இளம்பருவ போதைகளுக்கு தன்னை அடிமையாக்கிக்கொண்டான். போதையில் நண்பர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு, தெருகளில் விகாரமான ‘ஹாரன்’ சத்தத்துடன் கண்மூடித்தனமான வேகத்தில் போவது தான் அவனுக்கு பொழுதுபோக்கு, வேலை, கடமை. தெருக்காரர்கள் வாயில் விலாத நாளே இல்லை. குடும்பத்தாராலும் அவனை திருத்த முடியவில்லை. போன வருடம், தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில், போதையில் பெரிய இடத்துப் பெண்களிடம் ஈவ்டீசிங் செய்ததற்காக ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்தான். அவனை போலிஸார் இழுத்து செல்லும் பொழுது, போதையில் சுயநினைவிற்றி இருந்தான். கைலி அவிழ்வதைக் கூட அவனால் உணர முடியவில்லை. கஞ்சா வைத்திருந்த குற்றத்தையும் ‘எஃப்.ஐ.ஆரில்’ சேர்ப்பதாக இருந்தது. ஆனால் அவன் தாய், இன்ஸ்பெக்டர் காலில் விலாத குறையாக கெஞ்சியதால், அதை இன்ஸ்பெக்டர் மறைத்துவிட்டார். அதற்கு பின் அவன் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறியது. அல்லது அவனே திருந்திக்கொண்டு தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டான். கடந்த ஒரு வருடமாக எந்த வித போதை வஸ்துகள் மீது கை வைப்பதில்லை. பஜாரில் உள்ள ஒரு ‘எலக்ட்ரானிக்ஸ்’ கடையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கடையையும் போன மாதம் மூடிவிட்டார்கள். ஒரு மாதமாக வீட்டில் தான் இருக்கிறான்.
         சிறிது நேரத்தில் காளியின் அம்மாவும் வந்துவிட்டாள். பூக்கூடையை இறக்கி வைத்துவிட்டு. காளியின் அருகில் அமர்ந்தாள். அவளை பார்த்தவுடன், குழந்தை ”அம்மாச்சி” என்று சந்தோஷத்தில் குதித்தது,. கணவனிடம் இருந்து குழந்தையை வாங்கி, மடியில் உட்கார வைத்துக்கொண்டாள்.
        “கண்ணுக்குட்டி சோறு சாப்புடுங்க? அம்மாச்சி ஊட்டிவுடட்டா?”
   குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தது,
      “காளி, பரவால்லடி இன்னைக்கி எல்லாம் சீக்கிரமா வித்துடுச்சு”
      “என்ன இன்னைக்கி  எதாவது விஷேசமா? நெத்துதான முகுர்த்தம்?”
      “தெரியல என்னனே… வித்துச்சே அது போதும்டி”
      “ஆமா… ஆமா…”
      “மணி வந்தானா?”
      “இன்னும் வரலையே”
      “ஏங்க உங்கள்ட எதாவது சொல்லிட்டு போனானா?”
     “என்ட எதுவும் சொல்லலடி”
     “காலைல ஏழு மணிக்கு போனான். இன்னும் வரலம்மா”
      “அடப்பாவி, சாப்டானா?”
      “எங்க ஏழு மணிக்கு யாரு சமைக்கிறா?”
     “சாப்புடாம கொள்ளாம எங்க திரியிறான்?”
     “சரி, என்னப்பண்ணப் போறானு அவன்ட எதுவும் விசாரிச்சையா?”
     “இல்லடி… நல்ல நேரமா பாத்துக்கேக்கனும்”
     “ஆமாம்மா.. நீ ஜோசியம் பாரு நல்ல நேரம் எப்பனு”
     “இது என்னடி கொடும? அவன் என்ன வேலைக்கு போக மாட்டேனா சொல்லப்போறான்?”
     “அதுக்காக நீ கேக்கக்கூடாதா?”
     “ஒரு வருசமா இராப்பகல ஒழக்கெலையா? தெனோ காலைல எட்டு மணிக்கு போய்ட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு தான வருவான். சம்பாதிச்ச காச எல்லாம் அவனா வச்சுக்கிட்டான். உங்களுக்கு தானடி செஞ்சான். உம்பிள்ள காது குத்துக்கு செய்யலையா? அதுக்கே உம்மாமியார் மூஞ்சியத்தூக்குச்சே. உந்தங்கச்சிக்கு செய்யலையா? அடுத்து பொறக்கப்போற  உம்பிள்ளைக்கும் அவன் செய்வான். என்ன இப்பிடி பேசுற? என்னமோ ஒரு மாசம் வேலைக்கு போகலனா ஆளாலுக்கு அவன கேப்பிங்களா?”, கோவத்தில் அணைத்தையும் கொட்டித்தீர்த்து விட்டாள்.
     காளிக்கு கோவமும், அழுகையுமாய் வந்தது. ’தனக்கு, தன் பிள்ளைகளுக்கும் அவன் செய்ய வேண்டும், அதற்காக அவன் வேலைக்கு போக வேண்டும்’ என்று காளி எண்ணுவதாக இருந்தது, அவள் அம்மாவுடைய பேச்சு. ஆனால் காளி ஒருபோது அப்படி எண்ணவில்லை. அவனுக்கு ஒரு நிரந்திர வேலை கிடைத்துவிட்டால், அவன் அவனையும் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வான். அப்பாவுக்கும் முன்பு போல சரியாக வேலை கிடைக்காமல் இருப்பது தான் மணியை சிக்கிரம் வேலைக்கு போகுமாறு வற்புறுத்த வேண்டும் என்று தோன்றியது. தன் பிள்ளைக்கு அவன் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலும், இனி எதுவும் செய்யவில்லை என்றாலும் அவளுடைய எண்ணம், ஆசை இதுவாகத்தான் இருக்கும். தாயுடன் வாதம் செய்ய காளி விரும்பவில்லை. எதுவும் பேசாமல், கிண்ணத்திலிருந்த கஞ்யை பிசைய ஆரம்பித்துவிட்டாள்.
     மதியம் ஒரு மணி போல, மணி வந்தான். வந்தவுடன் காளியின் குழந்தையை தூக்கிக் கொஞ்சத் தொடங்கிவிட்டான். காளியும் அப்பாவும் அமைதியாக இருந்தனர்.
     “எங்கடா போன? காலைல விடுஞ்சு போய்ட்டு இப்பதான் வர. சாப்டியா இல்லையா? சாப்பாடு போடவா?”
     “பாண்டி அண்ணன பாக்க போயிருந்தேன். ரெண்டுமூனு பேர்ட சொல்லி வைக்கிறேனு சொன்னாரு. பாப்போம். சேர் ஆட்டோ வாடகைக்கு கெடைக்குறது தான பெருந்தலவலியா இருக்கு”
    சேர் ஆட்டோ ஓட்டப்போவதாக மணி சொன்னதும், அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவள் தினமும் பூ விற்கச்செல்லும் போதும், பூ மார்க்கெட்க்கு போகும் போதும், சேர் ஆட்டோக் காரர்கள் படும்பாட்டை பார்த்திருக்கிறாள். பல முறை அவள் கண்முன்னாலேயே அவர்கள் போலிஸ்காரர்களிடம் அடிவாங்குவதையும், அதற்கு பயந்து அவர்கள் ஓடுவதையும் பார்த்திருக்கிறாள். ஆட்டோ ஓட்டுவதாக தன் மகன் எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருந்தாலும், சேர் ஆட்டோ ஓட்டுவதாகச் சொன்னது தான் அவளுக்கு பிரச்சணையாக இருந்தது.  
              ”மணி ஆட்டோ ஓட்டுப்பா வேணானு சொல்லல. ஆனா சேர் ஆட்டோ வேணாம்ப்பா”
          “ஏன் அதுக்கென்ன கொறச்சல்”
          “ரோட்ல நின்னு கண்டவன்ட அடிவாங்கனும். போலிஸ்காரங்க வேற அடிக்கடி காசு புடுங்குவானுங்க.”
           “அதெல்லாம் பாத்த சாப்புட முடியுமா?”
           “ஏன் சின்ன ஆட்டோ ஓட்டுனா சாப்புட முடியாதா? ஏன் பாண்டி நல்லாதான இருக்கான். தெநோ நானூரு ருபா வீட்டுக்கு கொண்டுவந்தா பத்தாதா?”
           “யோசிச்சு சொல்றேன்”
          “யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு. நீ சின்ன ஆட்டோவே ஓட்டுப்பா”
          “சரி சரி.. நீ சாப்பட எடுத்துவை”
          “மணி, பாண்டிட்ட சொன்ன உடனே எற்பாடு பண்ணித்தருவான்.”
          “ம்ம்ம்.. சாப்டு போறேன்”
          காளிக்கு பெரிய கவலை ஒன்று போய்விட்டதாக இருந்தது. தன் மகளை அழைத்து, “பாப்பா, மாமா ஆட்டோ வாங்கப் போறான். நாம அதுலையே ஆஸ்பத்திரிக்கு, வீட்டுக்கு போய்ட்டு வரலாம்.”
                   “காளி, உன் பிரசவத்துக்கு நான் தான் உன்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவேன். உன் வீட்டுக்காரர்ட சொல்லிரு”
       மணி சொன்னபடியே செய்திருப்பான்.  
  
               

கெளரவம்

                                ஈஸ்வரி எப்பொழுதும் தன் கடையை ஏழு மணிக்கு தான் திறப்பாள். ஆனால் இன்று ஆறு மணிக்கெல்லாம் திறந்ததுடன், வேலைகளையும் வேகவேகமாக செய்துக்கொண்டிருந்தாள். மூன்று வகை சட்னி, பாசிப்பருப்பு சாம்பார், துவயல் ஆகியவற்றை சமைத்துவிட்டு, இட்லியை வேகவைக்கத் தொடங்கினாள். குடிநோயால் கணவன் இறந்த பின், ஈஸ்வரி இந்த இட்லி கடையை கடன் வாங்கி ஆரம்பித்தாள். பத்து வருடங்களாக இந்த கடைக்கு, அவள் தான் முதலாளி, வேலையாள் எல்லாம். மாலை நேரங்களில் மட்டும் அவளுடைய இரண்டு மகள்கள் உதவிக்கு வருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூத்தவளை தாய்வழியில் நெருங்கிய சொந்தத்தில் கட்டிக்கொடுத்தாள். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டுகிறான். மகளை அவன் வசதிக்கேற்ப நன்றாக பார்த்துக்கொள்கிறான். இதுவரை பிரச்சனை இல்லை.  அவள் யோசனையெல்லாம், இளயவள் மேல் தான். இன்று அவளை பெண்பார்க்க வருகின்றனர். ஒரு மணி நேரம் முன்னரே கடையை திறக்க இது தான் காரணம்.
        பெண்பார்க்கும் படலம் இரண்டு நாட்களுக்கு முன் தான் அவசரம் அவசரமாக எடுக்கப்பட்டது. அப்படி ஒன்றும் இளயவளுக்கு வயதாகிவிடவில்லை. போன வருடம் தான் பத்தாவது முடித்தாள். அதற்காக காரணமில்லாமல் இல்லை. இளயவள் பள்ளிக்கு செல்கையில், அந்த பகுதி இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின் இருவரும் ஊர்சுற்றுதலும் நடந்திருக்கிறது. ஒரு நாள் அவன், அவளை பார்க்க வீடு வரை வந்ததாகவும், உள்ளே இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அக்கம்பக்கத்தினர் தன் காதுபட பேசும் போதுதான், ஈஸ்வரிக்கு இந்த விவகாரமே தெரிந்தது. போன வாரம், ஈஸ்வரி வீட்டில் இருக்கும் சமயம், குடிபோதையில், அவளை பார்க்க வீட்டிற்கே வந்து விட்டான். ஈஸ்வரி கோபத்தில் அவனை அடித்து தெருவில் தள்ள, அவன் போதையில் தாயையும், மகளையும் ஏச, தெருவில் அவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. அங்கு ரோந்தில் இருந்த போலீஸார், அவனை கண்டித்து அனுப்பிவைத்தனர். இதனால் பள்ளிப் படிப்பை நிருத்திவிட்டாள். ரேசன் கடை, மளிகை கடை, குழாயடி, பால் டிப்போ என எங்குமே ஈஸ்வரியால் முன்பு போல செல்ல முடியவில்லை. யார் முகத்தையும் பார்க்காமல், யாரிடமும் பேச்சுக்கொடுக்காமல் தலையை குனிந்தே நடக்க வேண்டியிருந்தது. ‘இவ மக எடம் கொடுக்கலனா, அவ்வே வீடுவரைக்கும் வருவானா?’, என தெரு முழுதும் ஈஸ்வரியை பற்றியே பேச்சு நிகழ்ந்தது. ஈஸ்வரியால் முன்பு போல் கடையில் வேலை செய்ய முடியவில்லை. ‘இத்தண நாள் சேத்துவச்ச கெளரவம் ஒரே நாள்ல போச்சே’ என்று தனக்குள்ளே பொருமிக்கொண்டிருந்தாள். மகளின் உடனடி திருமணம் தான், அவள் குடும்பத்தின் கெளரவத்தை மீட்டெடுக்கும் ஒரே தீர்வாகப் பட்டது. தன் தம்பியிடம் எல்லா விவரத்தை சொல்லி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு வரனை பார்க்கச் சொன்னாள். அப்படியமைந்தது தான் இன்று பெண்பார்க்க வரும் வரன்.
              மாப்பிள்ளை வீட்டார் பதினோரு மணிக்கெல்லாம் வருவதாக சொன்னதால், ஒன்பது மணிக்கு கடையை மூடிவிட்டாள். தேவையான பொருட்களை நேற்றே வாங்கி வைத்துவிட்டாள். பெண்னை ஈஸ்வரியின் அக்கா மகள்கள், நீராட்டு விழாவில் ஈஸ்வரியின் தம்பி சீராகக் கொடுத்த பட்டை உடுக்கச்செய்து அலங்கரித்திருந்தனர். அவர்கள் வருவதற்குள் வீட்டை சுத்தம் செய்வது தான் பாக்கி. ஒரே ஒரு அறையும், அடுப்படியும் மட்டும் உள்ள வீட்டை சுத்தம் செய்வது அவளுக்கு பெரிய காரியமில்லை. பத்துமணி வாக்கில் சில நெருங்கிய சொந்தங்கள் வர தொடங்கின. பதினொரு மணி நெருங்கையில் அவளுக்கு பயமும், கொஞ்சம் அவுமானமும் தொற்றத் தொடங்கியது. ‘தம்பி எல்லாத்தையும் சொல்லிருப்பான், அவுங்களும் அக்கம் பக்கத்துல விசாரிச்சுருப்பாங்க, எப்பிடி மாப்பிள்ள வீட்டுக்காரங்க மொகத்துல முழிக்கிறது. அத காரணம் வச்சு, பவுனும் கூடப்போடச் சொன்னா?’.
            பதினொன்றரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாப்பிள்ளை பெண்னைப் போல் மாநிறம். அதே பகுதியில் ஒரு லேத்தில் வேலை செய்கிறான். மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான். பெண் காப்பி தட்டுடன் வந்தாள். அவள் முகம் அழுது அழுது வீங்கிப்போயிருந்தது. கண்களும் உள்புறமாக அமுங்கியிருந்தது. இவற்றை ஓரளவுக்கு முகப் பவுடர் மறைத்தாலும், கீழ் உதட்டருகே இருந்த ரத்தக்காயம் நன்றாக தெரிந்தது. அது முந்திய இரவு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. கல்யாணம் பேசி முடிக்கப்பட்டு, மடப்புறம் மாரியம்மன் கோவிலில், அதே மாதம் ஒரு முகுர்தத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது. கையில் கழுத்தில் இருந்ததை போட்டு சீர் செய்துவிட்டாள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த வாடகை வேனில், தெருகாரர்களை கல்யாணத்திற்கு அழைத்து வந்தது, அவளுக்கு கெளரவமாக இருந்தது. ‘அந்த குடிகார நாய் வந்து ஏதாவது பிரச்சண பண்ணாம பாத்துக்கனும்’ என்று தம்பியிடம் சொல்லிக்கொண்டிருதாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
               ஒரு வருடம் கழித்து, இளயவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அதை வீட்டு வாசலில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அணைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் நோக்கில், சத்தமாக தன் பேரனை கொஞ்சினாள். எல்லோரும் ஈஸ்வரியையும், அவள் பேரனையும் பார்த்துக்கொண்டிருந்தனர். குழந்தை சிரித்தது. அதை பார்த்து மகளும் சந்தோஷத்தில் சிரித்தாள். ஈஸ்வரிக்கு இப்போது எல்லா கவலைகளும், அவுமானங்களும் பறந்துப் போய்விட்டது. இனி ஈஸ்வரி, ரேசன் கடை, மளிகை கடை, குழாயடி, பால் டிப்போ என எங்கும் கெளரவமாக செல்லலாம். இதை நினைத்து, ஈஸ்வரி சிரித்துக்கொண்டே இருந்தாள்.