Saturday, 23 August 2014

கிழவி


                                          

                                       தெந்திசையிலிருந்து காற்று ‘விர்’ ரென்று அடித்தது. காய்ந்து போய் வெளுத்திருந்த மண் தரையில் அடர்ந்திருந்த கருவேலஞ் செடிகள் மெல்ல அசைந்துக் கொடுத்தன. சூரியன் நடுவானிலிருந்து கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு ரூபாய் நாணயமளவு காது துவாரத்தை கிழித்து, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும் காதணிகளுடன் , முக்கால்வாசி வெள்ளை முடியையும் கால்வாசி கருமுடியையும் கொண்டையாக பின்னால் கட்டிக்கொண்டு ‘விக் விக்’கென்று  நடந்து வந்துக்கொண்டிருந்தாள் ஆச்சி.
                             பின்னால் ஐம்பதடி தூரத்தில், கரும்பச்சை நிறப் பாவாடைச் சட்டையில், ஐந்து வயதைக் கடக்கப் போகும் நிலையில் ஒரு சிறுமி முடியை காதோரமாகக் கொதிக்கொண்டே நடந்துவந்தாள்.  இடது கையில் காகிதத்தில் மடித்து வைத்திருந்த பலாச் சுளைகள் இரண்டு மீதமிருந்தது. வாயில் கொஞ்சம் பிசுறு இருந்தது. ஆச்சி அனல் காற்றையும் சுடுதரையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், நடைப் போட்டுக் கொண்டிருந்தாள். முகத்தில் ’வேண்டா வெறுப்பு’ அதிகமிருந்தது. ஆச்சிக்கு அது ஏற்கனவே நடந்து நடந்துப் புளித்துப் போன பாதையாக இருக்கலாம் அல்லது முக்கிய காரணத்திற்காக நடந்தே தீரவேண்டுமென்ற வரட்டு முடிவாக இருக்கலாம். ஆனால் சிறிமிக்கு இவையிரண்டுமே கிடையாது.
                         சிறுமி, “ஆச்சி”
            பதில் தரவில்லை அல்லது ஆச்சியின் காதுகளை அவள் குரல் எட்டவில்லை.
                       “ஆச்சி”, கொஞ்சம் சத்தமாகக் கத்தினாள்.
            இப்பொழுதும் அதே நிலைதான்.
                      “ஆச்சி”, சிறுமியால் முடிந்தமட்டில் எதிர்காற்றை கிழிக்கும் குரலில்.
             இப்பொழுது பலன் கிடைத்தது. நடையை நிறுத்தி தலையைத் திருப்பி, “என்னாடிடிடிடி....?”
              “நில்லு காலு வலிக்குது”
             “அவ்வளவு தான் கண்ணு. ரெண்டு மேட்டத் தாண்டுனா வந்துரும். அந்த வேப்ப மரத்துக்கு கீழக் கூட கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டுப் போவோம். வா கண்ணு”
            “போ நா வரல”
            “...........”
                 அவர்கள் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு, ஒரு வழியாக கண்ணுக்கு எட்டும் தூரத்திலிருந்த வேப்ப மரத்தையடைந்தனர். கால்களை நீட்டியமர்ந்தனர்.
           “ஆச்சி கால் வலிக்குது”
          “ஆச்சி உனக்கு காலப் புடிச்சுவிட்டுக்கிட்டே ஒரு கத சொல்றேன். கால் வலி போய்ரும்”
          “ இப்பிடி தான் சொல்லுவ ஆன எந்த கதையும் சொல்லமாட்ட”
          “இப்ப சொல்றேன் கண்ணு”
         சிறுமி கையிலிருந்த பலாச் சுளையை எடுத்து வாயில் வைத்துக் கடிக்கத்தொடங்கினாள்.
                 “ஒரு ஊர்ல ஒரு அழகான சின்னப் பொண்ணு இருந்த. ரொம்ப ஒல்லியா உன்ன மாதிரியிருப்பா அந்தப் பொண்ணு. எல்லாத்துக்கும் அவள பிடிக்கும். அவளுக்கு அம்மா கிடையாது. அப்பாவும் ரொம்ப மொரடனா இருந்தான். அதனால் அவ எப்பவும் அவளோட அக்காகிட்டையே தான் இருப்பா. ரெண்டுபேத்தையும் அவுங்க வீட்டுல இருந்த ஒரு கிழவி தான் பாத்துக்கிட்டா. எப்பவும் சந்தோஷமா இருப்பா. ஆனா அவளால பதினஞ்வயசு வரைக்கும் தான் சந்தோஷமா இருக்க முடின்சு.....”
         ஆச்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏன் ஆச்சி”
                “அவ அக்கா வேற சாதிக்காரன காதலிச்சு, யாருக்கும் தெரியாம கல்யாணம் பன்னிக்கிட்டா. அவளோட கோவக்கார அப்பா, அவள வீட்டுக்கு இழுத்துட்டு வந்து தாலிய அத்துப் போட்டு வேறொருத்தனுக்கு கல்யாணம் பன்னிவச்சுட்டான். அதுமட்டுமில்ல இவளும் இவ அக்கா மாதிரி வேற சாதிக்காரன கல்யாணம் பன்னக்கூடாதுனு , இவளுக்கும் கொஞ்ச நாள்ல அவ சாதிலயே ஒரு மாப்பிள்ளையப் பாத்தான். மாப்பிள்ளைக்கு அவளோட வயசு ரொம்ப ஜாஸ்த்தி. கல்யாணம் பன்னமாட்டேனு அடம்புடிச்சா. பாவம் அவ. அவளோட அப்பா அவளுக்கு கல்யாணம் பன்னிவச்சுட்டாரு. கல்யாணம் பன்னதுக்கப்புறம் அவ வேற ஊருக்கு போய்டா”
               “அப்புறம் அவ திரும்பி வந்தாளா ஆச்சி?”
               “ வந்தா வந்தா.....  கொஞ்ச நாளுக்கப்புறம் அவ முழுகாமயிருக்கானு சேதி வந்துச்சு. அவ சொந்தபந்தமெல்லாம் அவள பாக்கப் போனாங்க. பதினஞ்சு வயசு தான அவ ரொம்ப கஷ்டப் பட்டா. பக்கவே பாவமா இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் அவளுக்கு பெண் கொழந்தப் பொறந்துச்சு. அவ ஒடம்பும் வயசும் பிரசவ வலிய தாங்கிக்க முடியல. பிரசவத்துக்கு அப்புறம் அவ ஆஸ்பத்திரிலயே தான் கடப்பா.  ரொம்ப நாள் ஆஸ்பத்திரிலயே பொண மாதிரி கிடந்தா. அவ கொழந்தையக் கூட அவளால பாத்துக்க முடியல. அவள சின்ன வயசுல இருந்து பாத்துக்கிட்ட அந்த கிழவி தான் அவள  ஆஸ்பத்திரிலையும் கவனிச்சுக் கிட்டா. ஓரு நாள் அந்த அழகான பொண்ணு படுக்கைலயே செத்துப் போச்சு. அவ சொந்தவூருக்கு தூக்கிட்டு வந்தாங்க. அப்ப அந்த ஊர்ல கோயில் திருவிழா, தீட்டுப் பட்டுரும்னு நேர சுடுகாட்டுக்கு கொண்டுப் போய்டாங்க. எப்பவும் துறுதுறுனு இருந்தப் பொண்ணு, இப்ப ஒரு அசைவுமில்லாம கடந்தா. அவமேல வறட்டி, வக்கெலு, சகதினு அடுக்குனாங்க. ரெண்டாவது தடவையா அவ அப்பேன் அவளுக்கு கொல்லிவச்சான். எல்லாரும் திரும்பிப் பாக்காம வந்துட்டாங்க. கொஞ்ச நேரத்துல அவ சாம்பலாய்ட்டா“
                  “அவளோட கொழந்த எங்க போச்சு ஆச்சி”
                 “அந்தக் கொழந்தைய அவ அப்பாட்டயே விட்டா, அவள கொன்ன மாதிரி அந்த கொழந்தையையும் கொன்றுவானு, அவ வீட்டுல வேலப் பாத்த அந்தக் கிழவி கொழந்தைய யாருக்கும் தெரியாம தூக்கிக்கிட்டு அவ சொந்த கிராமத்துக்கே வந்துட்டா. இப்ப அந்தக் கிழவி அவளுக்காத்தான் வாழ்ந்துக் கிட்டிருக்கா”
                 ஆச்சி சிறுமியை கட்டியணைத்தாள். அச்சியின் கண்கள் கலங்கவேயில்லை. அது பயனற்றது என்று அச்சி முன்பே உணர்ந்திருந்தாள்.
                   “சந்தைக்கு போய்டு உடனே வந்துருவோம். தெனோ உன்ன ஈஸ்வரியக்கா வீட்ல தான விட்டுட்டு போவேன். இன்னக்கி யாரும் அவுங்க வீட்டுல இல்லனு தான உன்னயும் கூட்டிட்டு போறேன். இன்னக்கி ஒரு நாள் வாமா கண்ணு”