Friday 30 October 2015

பழைய நாவல்

               ஒரு பழைய புத்தக கடையில் அந்த நாவலை வாங்கினேன். அட்டை இல்லாமல் மஞ்சள் புடித்து, குப்பை போல கடந்தது. கடைக்காரர் அந்த நாவலுக்கு காசு வாங்கவில்லை. முதல் வேலையாக என் அறைக்கு போன உடன், நாவலை புரட்டிப்பார்த்தேன். அதிலிருந்த உலகம் வேறுவிதமாக இருந்தது. மனிதர் உட்பட அணைத்து பட்சிகளிலும் ஒரு கவர்ச்சி இருந்தது. அந்த நாவலின் நாயகனுக்கு என் பெயர் தான். வெகு சீக்கிரத்தில், என்னுடன் ஒட்டிக்கொண்டான். தினமும் இரவு, நாவலை திறந்தவுடன், அவனுடைய உலகத்தை பற்றி சிலாகிக்கத் தொடங்கிவிடுவான். ஒரு நாள் அவனிடம் என் ஆசையை சொன்னேன்.
           “நண்பா… என்னையும் உங்கள் உலகத்திற்கு அழைத்து செல்கிறாயா?”
            “நிச்சயம். ஆனால் ஒரு பகல், ஒரு இரவு மட்டும் தான் நீ இங்கு இருக்கவேண்டும். மேலும், நீ இங்கு வரும் அதே நேரம் நான் உன் உலகத்திற்கு போய்விடுவேன். சரியா?”
             “அப்படியே நடக்கிறேன்.”
                 அன்று இரவே நான் இங்கு வந்துவிட்டேன். அவன் என் உலகத்திற்கு போய்விட்டான். அவன் அறையில் மேஜை மேல் உள்ள இந்த நாவலை பத்திரமாக கையில் எடுத்து வைத்துக்கொண்டும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அந்த நாவலை புரட்டி, அவனுடன் நான் பேசவேண்டும் என்று கட்டளையிட்டான். நான் மண்டையை ஆட்டினேன்.
இப்போது முதல் வேலையாக ‘சுவாரத் தீவிற்கு’ செல்ல வேண்டும். அந்த தீவின் பெண்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். அதற்கு முன் இந்த நாவலை எரிக்க வேண்டும்.   

No comments:

Post a Comment