Saturday 7 February 2015

என் அறை


“இது தான் என் அறை. நான் இங்கு வர விரும்பி, பெரிய போராட்டத்திற்கு பின்பே, எனக்கு இந்த அறையை கொடுத்தார்கள். சிறிதாக இருந்தாலும், எனக்கும் போதுமானதாக இருக்கிறது. எப்பொழுதுமே இருட்டாகவே இருக்கும், அந்த இருள் தான் எனக்கான இன்பத்தை தருகிறது. என் அறையை சுற்றிலும் டிசம்பர் பூக்களும், ரோஜா பூக்களும் நிறைந்திருக்கும். என் அறையை போல நிறைய அறைகள் அருகில் உள்ளன. அங்கு இருப்பவர்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன். அவர்களும் அப்படியே. இந்த அறையில் நான் மட்டுமே இருப்பேன். யாரையும் அனுமதிக்கமாட்டேன். வெளியில் இருப்பவர்கள், நான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் நான் எப்போதாவது தான் தூங்குவேன். பெரும்பாலான நேரங்களில், என் பால்ய வயது சுவை நிறைந்த அனுபவங்களை அசைப்போட்டுக்கொண்டிருப்பேன். அந்த மொட்டை வெயில் மைதானங்களிலும், பாழடைந்த நாயர் வீட்டிலும் தான் என் மனம் அலைந்துக்கொண்டிருக்கும். என் பள்ளிக்காதலியை பற்றி நிறைய கவிதைகள் யோசித்துவைத்திருக்கிறேன். க்ரைம் கதைகள் கூட யோசித்துவைத்திருக்கிறேன். ஆனால் அதை எழுதிவைக்க காகிதங்கள், என் அறையில் கிடையாது. என்னை நிங்கள் அனாதை என்று எண்ணிவிடாதீர். எனக்கும் உறவுகள், நண்பர்களுண்டு. எப்போதாவது வருவார்கள். என் அறை வாசலில் வந்து என்னை அழைப்பார்கள். எனக்கு என் அறையை விட்டு வெளியே வர இஷ்டமில்லை. அதனால் அப்போது மட்டும் தூங்குவது போல் நடிப்பேன். அவர்களும் அதை உண்மை என்று நம்பி போய்விடுவார்கள். ஹா ஹா ஹா.. முட்டாள்கள்…. முட்டாள்கள்…. இங்கு இருக்கும் பொழுது யாரைப்பற்றியும் பயங்கொள்ள தேவையில்லை. சில நேரம், நான் குதுகலத்தில் கூச்சலிடுவேன், சத்தமாக பாடுவேன், கோபத்தில் அறைக் கதவை பலமாக எத்துவேன். ஆனால் நான் செய்வது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாதவண்ணம் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன? உங்களுக்கும் என் அறை மீது காதல் வந்து விட்டதா? கவலைப்படாதீர் இங்கு சில அறைகள் காலியாகத் தான் உள்ளது. சிக்கிரம் வாருங்கள்…. ஓ…. விலாசம் கேட்கிறீர்களா? ம்ம்ம்... குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
மதுரை,
திருப்பரங்குன்றம் சாலை,
புனித மாதா கல்லறைத் தோட்டம்.
இன்னுமென்ன யோசனை கிளம்புங்கள். நான் காத்துக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. சீக்கிரம்…….

No comments:

Post a Comment