Saturday 7 February 2015

கோமகள் கனலி


1
இளவரசி கனலி சினத்தின் உச்சமாய் உருமாறியிருந்தாள். அரசவை மந்திரிகள், அவளை நெருங்கத் திரணியற்று, தூரமாக நின்றுக்கொண்டிருந்தனர். அவள் தான் வாளை எடுத்து,
“ என்ன பார்க்கிறீர்கள்? இந்தக் கனலி மனம்பொருந்திய பூக்களுடனும், தோகை விரித்தாடும் மயில்களுடனும், அரண்மனை தோழிகளுடனும் சிரித்து விளையாடும் பச்சிளங் கோமகளென்று எண்ணினீரா? இந்தப் பாண்டிய நாடு மலை வளத்துக்கும், அழகு கொழிக்கும் இயற்கைகும் மட்டும் சிறப்புற்றதல்ல. எதிரிகளை வேட்டையாடும் வீரத்திற்கும் சிறப்புற்றதே. இங்கு வீரத்திற்குப் பால் பேதம் தெரியாது. அங்கு என் தந்தை போர்களத்தில் மாய, இங்கு என்னைப் பட்டு விரிப்பில் துயில் கொள்ளச் சொல்கிறீரா? என்னிடமும் வாளுண்டு. அதன் வேகத்தை இனி பார்ப்பீர்கள். அந்தச் சுந்தரச் சோழனின் தலையைக் கொய்து, பாண்டிய தலைநகரான மதுரையில், இருகரைத் தொட்டோடும் வைகையின் மீன்களுக்கு இரையாக்குவேன். அதையும் பொருத்திருந்து பாரீர்”
கனலியின் கண்கள் தழலென, அவர்களை அஞ்ச செய்தது. பெயருக்கேற்றார் போல் கனலென உருப்பெற்றிருந்தாள். அவர்களால் இளவரசி கனலியை தடுக்க முடியவில்லை. சோழன் தலையைக் குறிவைத்த பருந்தாகப் போர்களம் சென்றாள் வீரக் கோமகள் கனலி.
2
”யோவ், பக்கத்துல போய்ராத. அப்புறம் அவ்வளவு தான். ரொம்பப் பக்குவமாதான் இந்தக் கிழவிய ஹேண்டில் பன்னனும்”
“என்னய்யா ஆச்சு? திடீர்னு இந்தப் பைத்தியகார கிழவிக்கி.......... டாக்டர் வரதுக்குள்ள இந்தக் கட்டிப் போடனும்”
“என்ன பண்ணித்தொலைய.. இப்ப இந்தக் கிழகி என்னைக்கும் இல்லாம இன்னைக்கி கோவமா இருக்கு. கைல ஏதோ இரும்புக் கம்பிவேற வச்சுருக்கு. கொஞ்சம் சாந்தப்படுத்தித் தான் மயக்க ஊசிப் போட முடியும்.. இப்ப இதுக்கிட்ட போகவே பயமா இருக்கு.”
அந்தக் கிழகி தன் போக்காகப் பேசிக்கொண்டே வாசலை நெருங்கினாள். இருவரும் கிழகியை, சங்கிலியால் கட்ட முயன்றனர். ஆனால் கிழகி அவர்களைக் கீழே தள்ளி கதவை வெளிப் புறமாகத் தாழிட்டு ஓடிவிட்டது.
3
நீள வானத்தின் கீழ் செங்கடல் போல, போர்களம் குருதியில் மூழ்கியிருந்தது. கடலில் மீன்கள் துள்ளுவது போல், இருநாட்டு வீரர்களும் தன் மார்புகள் கிழிய, குருதி கொட்ட துடிதுடித்து மாய்ந்துக்கொண்டிருந்தனர். வேல்களும் வாளுகளும் அவள் கண்களையும் மார்புகளையும் குறிவைத்து எய்தப்பட்டிருந்தது. கனலிக்கு இவை எதுவும் பயம் கொள்ளச் செய்யவில்லை. போரும் காயமும் குருதியும் பாண்டிய நாட்டுமக்களுக்குப் பிறவியிலேயே ஊறியிருந்தது. சீறிவரும் சர்பமாகக் கணநேரத்தில் தன் வாளுக்குச் சோழ வீரர்களை இரையாக்கினால். கண்களின் ஆக்ரோஷமும், வாளின் வேகமும் எதிரிகளை நிலைக் குலைய வைத்தது. கனலியில் திறன் பாண்டிய நாட்டு வீரர்களுக்கு ஊக்கம் தரும் மருந்தாக இருந்தது. வீரக் கோமகளின் தலைமையில் பாண்டிய படை, சோழப் படையைப் பின்வாங்க வைத்துக் கொண்டிருந்தது.
4
மனநோய் முற்றிப்போன சில பைத்தியங்களை ஒரு தனி அறையில் சங்கிலிகளால் பிணைத்து, அடைத்து வைத்திருந்தனர். அங்கு இருப்பவர்ளிடம் சற்றுத்தள்ளியே இருக்க வேண்டும். என்ன நேரத்தில் என்ன செய்வார்களென்று யாருக்கும் தெரியாது. வெளியே ஓடுவந்த பைத்தியக்காரக் கிழவி, அந்தத் தனியறைக்குள் அவள் வைத்திருந்த இரும்புக் கம்பியுடன் புகுந்தாள். கண்னில் பட்டவர்களை இரும்புக் கம்பியால் தாக்கினாள். சில பைத்தியங்கள் வலித்தாங்காமல் அலறியது. சில பைத்தியங்கள் அவளைத் தன் கைகளாலும் கால்களாலும் தாக்கியது. கிழவிக்கு வலி பெரிதாகப் படவில்லை. மேலும் மேலும் தாக்க ஆரம்பித்தாள்.
5
போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. சோழப் படை சுருங்கம் காணத் தொடங்கியது. தன் போர்திறமையால் பாதி வெற்றியை ருசிக்கத் தொடங்கினாள் கனலி. சுந்தரச் சோழனின் தலையை வைகை மீனுக்கு இரையாக்கும் சபதம் கைக்கூடும் தருணம் நெருங்கியது. வெப்பமும் குருதியும் சூழ, பாண்டியர்களின் எதிரி சுந்தரச் சோழனை கண் முன்னே சந்தித்தாள். இருவருக்கும் பலமான சண்டை நடந்தது. அவர்களின் வாள்கள், இடியும் இடியும் உரசிக்கொள்வது போலிருந்தது. கனலி தன் வாள் வீச்சால், சுந்தரச் சோழனின் வாளை இழக்க வைத்தாள். அவன் நிராய்தபாணியாக அவள் முன் நின்றான். வைகை மீனுக்கான இரையை அவள் கொய்தாள். தலையில்லா முண்டமாக அவள் முன் அவன் சரிந்து விழுந்தான். அவள் முகத்தில் வெற்றிக்களிப்புப் பிரகாசிக்கத் தொடங்கியது. மதுரையின் வானம் பிளக்க கனலி ஒரு ஆங்காரச் சிரிப்பு சிரித்தாள். அவள் சற்றும் எதிர்பாராமல், அவள் மார்பில் ஒரு வேல் வந்து பாய்ந்தது. வெற்றியை முழுதாக அனுபவிக்கும் முன் பாண்டிய நாட்டு வீரக் கோமகள் கனலி போர்களத்தில் மாய்ந்து போனாள். அவள் உயிர் பிரியும் முன் ஏதோ முனுமுனுத்தாள்.
6
பைத்தியக்காரக் கிழவி பெரும்பாலானவர்களை அடித்து, வலியால் மயக்கமுறச் செய்தாள். அவள் வெறி அடங்குவதாகத் தெரியவில்லை. கடைசியில் கல்தூண் போல வளர்ந்திருந்த ஒருவனைக் கிழவி முடிந்தமட்டில் வெறிக்கொண்டு இரும்புக் கம்பியால் அடித்தாள். அவனுக்கு அது வலிக்கவில்லை. இன்னும் வெறிக்கொண்ட கிழவி, அவன் கழுத்தில் கம்பியைக் கொண்டு அடித்தாள். வலியில் அவன் துடித்துக் கத்தினான். கிழவிக்கு இது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். பெரிய சத்தத்துடன் ஆனந்தமாகச் சிரித்தாள். வலியால் கோவம் கொண்டவன், அந்த இரும்பு கம்புயை பிடுங்கி, அவள் மார்பில் குத்தி இறக்கினான். எந்த அசைவுமற்று அப்படியே தரையில் விழுந்தாள். அவள் உயிர் பிரியும் முன் ஏதோ முனுமுனுத்தாள்.
7
”பாவம்ய்யா கிழவி, எப்பையுமே அந்தக் காலத்து ராஜாகளோட சினிமாவ பாத்துட்டு ஒலறிக்கிட்டு இருக்கும். அன்னக்கினு பாத்து, வெறி புடிச்சிருச்சு. அதொட கம்பியாலையே குத்துப்பட்டுச் செத்துப் போச்சு”
“ஆமா கடைசில என்னமோ வாய்ல அனத்திக்கிட்டே இருந்துச்சே?”
“ என்னமோ சொல்லுச்சே... ம்ம்ம்...
நாபகம் வந்துருச்சு... “
“என்னையா?”
“ ’இந்தச் சுந்தரச் சோழனோட தலைய... வைகை மீனுக்கு இரையாக்கிருங்க... இரையாக்கிருங்க...இரையாக்கிருங்க....’னு ”...........

No comments:

Post a Comment