Friday 3 October 2014


       
                  
                    எனக்கு சின்ன வயசுல இருந்தே இது இல்ல. ஒரு ஆறாவது எழாவது படிக்கும் போதிருந்துதான் எனக்கு இது வர ஆரம்பிச்சது. எனக்கே தெரியாது திடிர்னு வரும். விளையாடும் போது, ரொம்ப நேரம் சிரிக்கும் போது, ஓடும் போது, ஏன் சில நேரம் குளிரடிச்சா கூட வரும். அப்ப மூச்சு மேல மேல இழுக்கும், மூச்சே விடமுடியாது. யாரயும் கத்திக் கூப்புட முடியாது. ஏன் பேசவே முடியாது. அதனாலயே எங்க அம்மா என்ன தனியா வெளிய விடாது. வீட்டுல வேலப் பாக்கும் போதும் அது கூடவே வச்சுக்கும். அதுகூட இருந்தா எனக்கும் எதுவுமாகாது. ஒரு தடவ, பக்கத்தூர்ல ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு என்ன கூட்டிட்டு போய் காட்டுச்சு. அவுங்க பெரிய பெரிய கரண்டு மிசின காட்டி,, நறையா காசு கேட்டாங்க. எங்கம்மா பயந்துப் போய்ருச்சு, “என்னோட வீட்டுக்காரர்ட கேட்டு வரேன்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்துருச்சு. அவுங்க யாருக்கும் தெரியாது, எங்கப்பா எப்பயோ செத்துப்போய்டாருனு. எல்லைல இருக்குற கருப்பன் கோயிலுக்கு, சின்னப் பிள்ளையா இருக்கும் போது அடிக்கடி கூட்டிட்டு போகும். பூசாரிசாமி எனக்கு துன்னாரு போட்டு, “இவுக கருப்பனோட பிள்ள தாயி அவன் பாத்துக்குவான்னு சொல்லுவாரு. அப்பிடி சொல்றது எனக்கு ரொம்ப புடிக்கும். ஒரு வருசத்துக்கு முன்னாடி, எங்கவூருக்கு வெள்ள துணி போட்டுக்கிட்டு, கைல சிலுவ மெலுகு பத்தி எடுத்துக்கிட்டு நறயா பேர் வந்தாங்க. வாராவாரம் வந்து, இயேசு பாட்டு பாடுவாங்க. அவர பத்தி நறயா சொல்லுவங்க. “கவலைப்படாதீர், இயேசு உங்களுடனேயே இருக்கிறார்னு ஒருத்தவுங்க எங்கம்மாட்ட வரும்போதெல்லாம் சொல்லுவாங்க. அவுங்க பேரு நான்ஸி சிஸ்டர். அவுங்களுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும். அவுங்க வரும்போதெல்லாம், என்னைய பத்திச் சொல்லி எங்கம்மா அழும். நறயா நாள் எங்க வீட்டுக்கு ஃபாதரும், எல்லா சிஸ்டரும் வந்து பாட்டுப் பாடுவாங்க, கத்தி அழுவாங்க, கர்தர கும்புடுவாங்க. எங்கவீட்டு கதவுல, ‘நானே உனக்கு ஜீவனுமாக, வழியிமாக, சக்தியுமாக இருக்கிறேன்னு ஒரு காகிதம் ஒட்டிட்டு போனாங்க. அப்புறம் ஒரு நாள் எங்கம்மா, “உனக்கு பயம் வரும் போது, இந்த சிலுவைய புடிச்சுக்கோ. கர்த்தர் உன்ன காப்பாத்திர்வார்னு சொல்லி கலுத்துல ஒரு சிலுவைய மாட்விட்டுச்சு. அன்னைலயிருந்து அது சேலைய தலைல போத்திக்கிச்சு. கருப்பன் கோயிலுக்கும் போறத விட்டுருச்சு. எனக்கு பயம் வரும்போதெல்லாம் சிலுவைய புடிச்சுக்கிட்டு, கர்த்தர நனச்சுப்பேன். எங்கம்மாவுக்கும் எனக்கும் எதோ பேருவச்சாங்க. நேத்து ராத்திரி வயக்காட்டு பக்கம் போகும் போது, திடீர்னு மூச்சு இழுக்க ஆரம்பிச்சுடுச்சு., நா சிலுவைய புடிச்சுக்கிட்டேன். கருப்பன், கர்தர் எல்லாரையும் வேண்டுனேன். எனக்கு ஒன்னு ஆகல. கொஞ்ச நேரத்துல செரியாகிடுச்சு. நா அம்மாட்ட வந்து படுத்துக்கிட்டேன். நேத்து கருப்பனும் கர்தரும் என்னோட உயிர காப்பாத்திட்டாங்க. ஆனா இன்னைக்கி மூச்சு இழுத்து துடிச்சப்ப, என்ன அவுங்க காப்பாத்தல 


  

No comments:

Post a Comment